கரூர்:நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூரில் அளித்த பதில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (ஆக.29) கரூர் மாவட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென 'INDIA' கூட்டணியில் உள்ள கட்சிகள் வலியுறுத்தி வருவது குறித்து கேட்டதற்கு, நீட் தேர்வை இந்தியாவில் முதன் முதலில் கொண்டு வந்த கட்சியே 'INDIA' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிதான் என்றார்.
கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் 'நீட் தேர்வு அவசியம்' என கூறியது சமூக வலைதளங்களில் இன்றும் காண முடிவதாகவும், நீட் தேர்வுக்கு எதிரான வழக்கில் வாதிட்டு வென்ற நளினி சிதம்பரம் யார் என்றும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு நாடக நடிகர் நல்ல, கதை வசனம் எழுதக்கூடியவர். எத்தனை நாட்களுக்கு மக்களை ஏமாற்றுவார் என்று கூறிய அவர், இதேபோல இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது யார் என்றும், அப்போது முதலமைச்சராக பதவி வகித்த கட்சி எந்த கட்சி என்றும் கேள்வியெழுப்பினார்.
காங்கிரஸை திமுக தூக்கி எறியுமா?: மேலும் இது குறித்து பேசிய அவர், 'ஒரு மாநில கட்சி, இந்தியாவில் அமைச்சரவையில் 18 ஆண்டுகள் ஒரே கட்சி திமுகதான். வாஜ்பாய், விபி சிங், மன்மோகன் சிங் வரை திமுக அங்கம் வகிக்காத அமைச்சரவையே கிடையாது. கச்சத்தீவு பிரச்னையை அப்பொழுதெல்லாம் தீர்க்க முடியாத திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொண்டு காவிரி நதிநீர் பிரச்னை, கச்சத்தீவு மீட்பு பிரச்னை, நீட் தேர்வு ஒழிப்பு ஆகியவற்றை பேசி வருகிறது. காங்கிரஸை தூக்கி எறிந்துவிட்டு திமுக வந்தால் அரசியல் ரீதியான போராட்டக்களத்தில் இருந்து நாம் தமிழர் கட்சி விலகிக் கொள்ள தயாராக இருக்கிறது.
திமுக வெற்றிக்கு பாடுபட தயார், ஆனால் ஒரு கண்டிஷன்:இந்த மாதிரி சூழ்நிலையில் ஜெயலலிதா தமிழக அரசியலில் இருந்தால், நிச்சயம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேறி இருப்பார் என்றும், அவர் ஒரு சிறந்த தலைவர் எனவும் கூறினார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் போட்டியிலிருந்து இப்பொழுதே விலகிக் கொள்கிறது என அறிவிக்கத் தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியை விட்டு ,திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். நாம் தமிழர் கட்சி தொகுதி பங்கீடு பெறாமல், திமுக வெற்றி பெற வாக்கு சேகரிக்கத் தயாராக உள்ளது.
இஸ்லாமியர்களை பாஜகவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் திமுக விடுதலை செய்யுமாயின், திமுகவிற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என்றும், இதற்காக தேர்தலில் போட்டியிடாமல் விலகிக்கொள்ளவும் தயார் எனவும் தெரிவித்தார். திமுகவிற்காக நாடும் மக்களும்தான் முக்கியம் என விளக்கி ஓட்டு கேட்பேன் என்றும் கூறினார். இஸ்லாமிய சிறைக் கைதிகளை 30 ஆண்டாக சிறையில் வைத்துதான் திமுக பாதுகாப்பு அளிப்பதாகவும், இந்த நிலையில் திமுகவை எதிர்த்து பேசினால் சங்கிகள் என்று விமர்சிப்பதாகவும் சீமான் கூறினார்.
விஜயலட்சுமியின் குற்றச்சாட்டுக்கு சீமான் அளித்த பதில்:நடிகை விஜயலட்சுமிதொடர்ந்து புகார்கள் அளித்து உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்து வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆமாம். தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார் என்றும், தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வரட்டும், அவ்வளவுதான். இதில் வேறொன்றும் இல்லை. என்றும் சீமான் பதிலளித்துள்ளார்.