'எந்த ஒரு உபகரணங்களும் கொடுக்காமல் வேலை வாங்குகின்றனர்' - தூய்மைப்பணியாளர்களுக்கு நேர்ந்த அவலம் கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் தினம்தோறும் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. நிரந்தரம் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் அதிகாலை முதலே வீடு வீடாக குப்பைகளை சேகரிப்பது, தரம் பிரிப்பது, குப்பைத் தொட்டியில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றுவது என பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தூய்மைப் பணியாளர்களை மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுத்தக்கூடாது என சமூக செயல்பாட்டாளர்கள் பலர் நீதிமன்றம் வரை சென்று, பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல்வேறு உத்தரவுகள் பெற்று கழிவுகளை அகற்றுவதற்கு முன் தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், நவீன இயந்திரங்கள் மூலமே கழிவுகளை அகற்ற நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால், கழிவுகளை அகற்றுவதற்கு இன்னும் தூய்மைப் பணியாளர்களை மனிதாபிமானம் மற்றும் முறையில் சாக்கடைகளில் இறங்கி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பணி செய்ய என நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு வேடிக்கை பார்க்கிறது, கரூர் மாநகராட்சி.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4-ல் கரூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே அமைந்துள்ள சாலையில் அதிகாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போதே, தூய்மைப் பணியாளர் ஒருவரை கழிவுநீர் தொட்டியில் இறக்கி வெறும் கையால் சுத்தம் செய்து கொண்டிருந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அளவில் தூய்மைப் பணியாளர்களுக்காக செயல்படும் விழுதுகள் அமைப்பின் நிர்வாக இயக்குநர் தங்கவேல் கூறுகையில், ''கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரின் கவனத்திற்கு முறையிட இருப்பதாக கூறினார். கரூர் மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையரும் இது தொடர்பாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாக்கடைக்குள் இறங்கி பணியாற்றும்போது தூய்மைப் பணியாளர்கள் விஷவாயு தாக்கி இறக்கும் அபாயகரம் இருக்கிறது. நீதிமன்றம் கூறியுள்ள வழிகாட்டுதலின்படி இயந்திரங்களை கொண்டு மட்டுமே தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான தமிழ் ராஜேந்திரன் கூறுகையில், ''கடந்த 2012 டிசம்பர் 22ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், சாக்கடையில் தூய்மைப் பணியாளர்கள் இறக்கி வேலை செய்வது தடை செய்யப்பட வேண்டும்.
இயந்திரங்களை மட்டுமே இது போன்ற பணிகளுக்கு ஈடுபடுத்த வேண்டும். சாக்கடையில் இறங்கி தூய்மை பணியாளர்களை பணி செய்ய நிர்பந்தித்தால் சட்டப்பூர்வமான தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு ஒரு மனிதாபிமானமிக்க தீர்ப்பாகும். சட்டங்கள் விதிமுறைகள் தீர்ப்புகள் உள்ளிட்டவை இருந்தாலும், மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் விதிமுறைகளை மீறி சாக்கடைக்குள் தூய்மை பணியாளர்களை இறக்கி பணி செய்ய நிர்பந்தித்து வருகிறார்கள்.
கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனை அருகேவுள்ள சாலையில் கரூர் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவரை சாக்கடைக்குள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி இறக்கி, பணி செய்ய நிர்ப்பந்தித்து இருக்கிறார்கள். இது போன்ற சட்ட விதி மீறல்களில் கரூர் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபடாமல் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நீதிமன்றத்தை நாடி தூய்மை பணியாளர்களுக்கு நலன் நாட கோரிக்கையை முன்வைக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு செலவிடப்பட்ட தொகை, தூய்மைப் பணி மேற்கொள்வதற்காக வாங்கப்பட்ட நவீன இயந்திரங்கள் இருந்தும், இன்னும் தூய்மைப் பணியாளர்களை கழிவுகளை அகற்ற பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்ய நிர்பந்திக்கும் மாநகராட்சி அதிகாரிகள் மீது கரூர் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க:நாளை குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு - 55,071 பேர் எழுதுகிறார்கள்!