கரூர்:விசுவநாதபுரி அமராவதி ஆற்றுப்படுகையில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இன்று அதிகாலை 2 மணியளவில் மணல் அள்ளப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் ஆத்தூர் செல்லரபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, மணல் திருட்டில் ஈடுபட்ட கோதூர் பகுதியைச் சேர்ந்த தயாநிதி, ஆத்தூர் செல்லரப்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ், கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் ஆகிய மூவரை கைது செய்து, திருட்டுக்குப் பயன்படுத்திய மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் மணல் திருட்டை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஓடும் இருசக்கர வாகனத்தில் 75 யோகாசனங்கள் செய்து அசத்திய இளைஞர்!