கரூர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் கரூர் 80 அடி சாலையில் நேற்று (ஜூன் 27) நடைபெற்றது. இந்த கூட்டம், கரூர் மத்திய நகர செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் மேடைப் பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத் மற்றும் சைதை சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு மேடையில் உரை ஆற்றினர்.
அப்போது பேசிய திமுக மேடைப் பேச்சாளர் சைதை சாதிக், "1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்று முதலமைச்சராக இருந்த காமராஜர், சட்டசபையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் எழுப்பிய கேள்விள் குறித்து விருகம்பாக்கம் பொதுக்கூட்டம் ஒன்றில் சவால் விட்டு பேசினார்.
அப்போது, எதிர் வரும் 1962 சட்டமன்றத் தேர்தலில் அரசுக்கு இடையூறாக சட்டமன்றத்தில் செயல்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேரை நிச்சயம் தோற்கடிப்பேன் என்று சவால் விட்டார். அவர் சொன்னபடியே 1962ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. 14 பேர் காமராஜர் கூறியதைப் போல தோற்றனர்.
ஆனால், கருணாநிதி தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் சென்றார். கருணாநிதி, இந்தியாவின் கிங் மேக்கராக கருதப்பட்ட காமராஜர் விட்ட சவாலை வென்று காட்டியவர். ஏன் இதை கூறுகிறேன் என்றால், அவரைப் போன்று அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அரச, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை வைத்து மிரட்டி பார்க்கிறது.