கரூர்:பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் இன்று (ஜூன் 11) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ’காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக இருந்தது. 2014 முதல் 2018ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 15 டாலராகவும், தற்போது கச்சா எண்ணெய் 60 டாலராகவும் இருந்தது.
கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் ரூபாய் 20 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளது. பிரிட்டிஷ் அரசை விட கொடுங்கோலான வரி விதிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது.
கடந்த மே 21ஆம் தேதி முதல் 10 நாள்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் அல்லல்பட்டுவருகின்றனர். கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை புதைக்க மயானத்தில் இடமில்லை. ஈவு இரக்கமின்றி பெட்ரோல், டீசல் விலையை 21 முறை உயர்த்தியுள்ளது.
உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வளவு வரி வசூலிக்கப்படுவதில்லை. இந்தியாவிடமிருந்து பெட்ரோல் டீசல் வாங்கி விற்கும் நேபாள அரசு கூட இவ்வளவு வரியை மக்கள் மீது சுமத்தியது இல்லை.
இந்த ஆட்சி விரைவில் துடைத்தெறியப்படவேண்டும். மக்களுக்காக காங்கிரஸ் கட்சி என்றைக்கும் துணை நிற்கும்’ என்றார்.
இதையும் படிங்க: ’யானை வலசை பாதைகள் சூழ் இடங்கள் தனியார் காடாக அறிவிப்பு’ - இதற்கான முக்கியத்துவம் என்ன?