கரூர்:கரூர் மாவட்டம் புலியூர் ராணி மெய்யம்மை பள்ளியில் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் வழங்குவது குறித்த கலந்தாய்வு பிப். 5ஆம் தேதி நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட மோகன் என்ற இடைநிலை ஆசிரியரின் பணிக்காலம் 5 ஆண்டுகள் முழுமையடையாத நிலையில், அவரது பெயர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி, கலந்தாய்வு நடைபெறும் ஒருநாள் முன்னர் ஒப்புதல் அளித்ததன்பேரில் பொது கலந்தாய்வில் அவர் பங்கேற்று பணிமாறுதல் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக, ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் விதிமுறைகளை பின்பற்றாமல் முறைகேட்டில் ஈடுபட்ட குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணி, குளித்தலை மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் குணசேகரன், கடவூர் வட்டார கல்வி அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார், ராஜலட்சுமி, கடவூர் வட்டார கல்வி அலுவலக ஊழியர் ஜான்சி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதில், குளித்தலை மாவட்ட கல்வி அலுவலரான பாலசுப்பிரமணி முன்னுரிமைப் பட்டியல் தயாரிப்பில் அலட்சியமாக செயல்பட்டதால் கல்வி இயக்குநரகம், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அதிரடி நடவடிக்கை கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வெற்றியுடன் தாய் மண்ணுக்கு திரும்பிய பிரதமர் - வழிநெடுக உற்சாக வரவேற்பு