தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ.50 லட்சம் மோசடி: கூட்டுறவு அலுவலர்கள் விசாரணை - கூட்டுறவு அலுவலர்கள்

கரூரில் கூட்டுறவுக்கடன் சங்கத்தில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கூட்டுறவுத் துணைப் பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலர்கள் விசாரணை
கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலர்கள் விசாரணை

By

Published : Jun 22, 2021, 9:41 AM IST

கரூர்: வேட்டமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவுக்கடன் சங்கம் புங்கோடை குளத்துப்பாளையத்தில் இயங்கிவருகிறது. இதில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முனுசாமி தலைவராக உள்ளார். இதன், செயலாளர் கிட்டான் என்பவர் கடந்த மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இச்சங்கத்தில் இரண்டாயிரத்து 380 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்நிலையில், இச்சங்கத்தில் மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவுத் துறை உயர் அலுவலர்களுக்குப் புகார்கள் வந்துள்ளன. புகாரின்பேரின் கூட்டுறவுத் துணைப் பதிவாளர் பாஸ்கரன் தலைமையில் நேற்று (ஜூன் 21) முனுசாமி, புகார்தாரர் ஆகியோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் ஏராளமான வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்புக் கணக்கு, கடன் ஆகியவற்றில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தங்கள் நகைகள், சேமிப்புத்தொகை பத்திரமாக உள்ளனவா என அறிய நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

ரூ.50 லட்சம் வரை மோசடி

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ராசாத்தி கூறுகையில், “கடந்த பிப்ரவரி மாதம் நகைக்கடன் வைத்தபோது, நகையைப் பெற்றுக்கொண்டு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக இல்லை, பிறகு வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என அலுவலர்கள் கூறினர். ஆனால், காலதாமதம் ஏற்படவே இது குறித்து புகார் அளித்தோம்.

விசாரணையில், எங்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டுவிட்டதாக ஆவணத்தில் இருந்தது தெரியவந்தது. இதனால், மோசடி செய்த சங்கத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோல கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரிக்கைவிடுத்தார்.

கூட்டுறவுக்கடன் சங்கத்தில் அலுவலர்கள் விசாரணை

மேலும், இது குறித்து துணைப் பதிவாளர் பாஸ்கரன் கூறுகையில், “இச்சங்க செயலாளர் கடந்த மாதம் உயிரிழந்துவிட்டார். இதனால், சேமிப்புக் கணக்கில் செலுத்திய பொதுமக்களின் தொகை வரவு வைக்கப்படவில்லை என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உறுப்பினர்கள் 10 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், நகை மோசடிகளில் 300 நகை பொட்டலங்கள் உள்ளன. அவை ஜூன் 22ஆம் தேதி (இன்று) ஆய்வுசெய்யப்படும். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு மோசடி தொகை குறித்த விவரம் தெரியவரும்” என்றார்.

பணம் கொடுக்காமல் வழங்கப்பட்ட கூட்டுறவு ரசீது

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த அலமேலு (62) என்ற மூதாட்டி 56 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகை வைத்திருந்த நிலையில் வெறும் 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்ததால் திடீரென அவர் மயக்கமடைந்தார். பின்னர், அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

இதையும் படிங்க:ஐடி ஊழியரின் வீட்டில் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details