கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமைதோறும் நடைபெற்றுவந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
காணொலி வாயிலாக குறைதீர்க்கும் கூட்டம்:
இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி காணொலி வாயிலாக "காணொலி குறைதீர் கூட்டம் " என்ற பெயரில் ஜுன்.21 முதல் திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ’பாரத் வீசி’ (Bharat VC) செயலி மூலம் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி,கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜுன் 21ஆம் தேதி நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்:
அனைவரின் கோரிக்கைகளையும் பரிசீலித்த மாவட்ட ஆட்சித்தலைவர், 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ள கோரிக்கைகளைச் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிறைவேற்றிவிட்டு அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
உடனடி நடவடிக்கை:
அதன்படி, குறிப்பாக அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர், தனது தாத்தா 1981ஆம் ஆண்டு இறந்ததைப் பதிவு செய்யவில்லை என்றும், தற்போது பதிவு செய்வதென்றால் 1981ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரைக்குமான இறப்பு பதிவின்மைச் சான்றினைப் பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். எனவே, தனக்கு உதவி செய்யும்படி கோரியிருந்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவிற்கிணங்க, மனுதாரரின் இருப்பிடத்திற்கே சென்று ஆய்வு செய்த அரவக்குறிச்சி வட்டாட்சியர் பன்னீர்செல்வம் மனுதாரரின் கோரிக்கையின் உண்மைத்தன்மையை உணர்ந்து, கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியனின் பரிந்துரையுடன் இறப்பு பதிவின்மைச் சான்றினை வழங்கினார்.
மக்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு! அதேபோல, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் கீழ்ப்பாகம் நடுப்பாளையம் பகுதியில் குடிநீர் பிரச்னை கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் செயல்படாமல் பழுதாகி, இருந்த மின் மோட்டாரை சரி செய்து குடிநீர்ப்பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாராட்டு:
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரின் காணொலி குறைதீர்ப்பு முகாம் மூலம் கரோனா ஊரடங்கு நேரத்தில், பொது மக்களின் கோரிக்கைகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்துசெய்யக் கோரிய வழக்கு: இன்று விசாரணை