கரூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்த மனுவில், "கொடைக்கானல் ஒன்றியம் கே.சி. பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். வட்டாரக் கல்வி அலுவலராகப் பணி உயர்வு பெற்றேன். வட்டாரக் கல்வி அலுவலர் பணியானது நிலை 18இல் உள்ளது.
வட்டாரக் கல்வி அலுவலர் பணியில் பதவி உயர்வு பெற்றுவருபவர்களுக்குத் தனி ஆணையும், நேரடியாக வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுபவர்களுக்குத் தனி ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பெறுபவர்கள் 70%, நேரடியாகத் தேர்வுசெய்யப்படுபவர்கள் 30% என ஆணை உள்ளது. இதில், வட்டாரக் கல்வி அலுவலராக நேரடியாகத் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு நிலை 18இல் கூறிய சம்பளம் வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து வட்டாரக் கல்வி அலுவலராகப் பணியாற்றியவர்களுக்கு நிலை 17 கூறிய சம்பளம் வழங்கப்படுகிறது.