கரூர்:கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று (செப்-29) நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர், வேளாண்மை இணை இயக்குநர் கோட்டாட்சியர் அரசு அதிகாரிகள், குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் குடகனாறு ஆற்றில் கலக்கும் கழிவு நீரால் மாசுபடுவதை தடுக்கவும், வல்லுநர் குழு அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும் என குடகனாறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின், குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராமசாமி ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, “திண்டுக்கல் மாவட்டம் மேற்குதொடர்ச்சிமலையில் உருவாகி, வேடசந்தூர் அரவக்குறிச்சி வழியாக 108 கிலோ மீட்டர் பயணிக்கும் குடகனாறு அணை நீண்ட காலமாக மரபு வழியில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
ஆனால், வேடசந்தூர் பகுதியில் 1973இல் கருணாநிதியால் குடகனாறு அணை கட்டப்பட்டு, வெள்ளியணை வரை 84 கிலோ மீட்டர் வரை வலதுபுற வாய்க்கால் வெட்டப்பட்டு, வெள்ளியணை குளத்தில் நீர் நிரப்பப்பட்டு சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயம் செழித்து வளர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளாக நீர்வரத்து வரவில்லை. காரணம் என்னவென்றால், அந்த திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரம் என்ற இடத்தில் குடகனாற்றின் குறுக்கே ஒரு தடுப்புச் சுவரை அமைத்து, மரபு வழி வரக்கூடிய நீரை திசைமாற்றம் செய்துவிட்டனர்.
இதற்காக விவசாய சங்கங்கள் அமைத்து போராட்டம் செய்ததன் விளைவாக, 2020ஆம் ஆண்டு எக்ஸ்போர்ட் கமிட்டி எனும் குடகனாறு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் கடந்தும், இதுவரை வல்லுநர் குழு அறிக்கை வெளியிடப்படவில்லை. குடகனாறு பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒட்டியுள்ள தோல் தொழிற்சாலைகள் கழிவு நீர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி கழிவுநீர், தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சி கழிவுநீரை நிரப்பும் அவலநிலை, குடகனாறு அணைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட எல்லைகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.