கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் க. பரமத்தி ஒன்றியத்தில் மட்டும் சுமார் 30 ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் க. பரமத்தி, பவித்திரம், குப்பம், புன்னம்சத்திரம், கார்வழி, தென்னிலை, சின்னதாராபுரம், துலுக்கம்பாளையம், எலவனூர், முடிகணம், கோடந்தூர் ஆகிய 11 கால்நடை மருந்தகங்கள் செயல்பட்டுவருகின்றன.
ஒன்றிய ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் விவசாயத்தில் மிகவும் பின்தங்கிய வறட்சிப் பகுதியாக க. பரமத்தி சுற்றுப்பகுதி உள்ளது. இங்கு கிணற்று நீரைக் கொண்டு விவசாயம் செய்தும் கால்நடைகள் ஆடு, மாடு, எருமை, கோழி போன்ற கால்நடைகளை விவசாயிகள் வளர்த்துவருகின்றனர். எனவே கால்நடை வளர்ப்போருக்காக மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் அவ்வப்போது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
இருப்பினும் க. பரமத்தி பகுதியில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்படுவதால் கால்நடைகளுக்கு நோய்கள் வரும் காலங்களில் இரவு நேரங்களில் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் கால்நடைகளை மருத்துவமனைக்கு அனுப்பப்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் சில சமயங்களில் நோய் தாக்கும் கால்நடைகளை விவசாயிகள் தொலை தூரம் கொண்டுசெல்வதற்குள் அவை இறந்துவிடும் சூழ்நிலையும் உள்ளது.
இதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டு பெரிதும் சிரமப்பட்டுவருவதால் அப்பகுதி கால்நடை விவசாயிகள் இந்த கால்நடை மருந்தக மையத்தை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டுமென ஒரு சில விவசாயிகள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.