தமிழ்நாட்டில் மூன்று நாள் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று கரூரில் கடைவீதி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், திருக்குறள் புத்தகத்தில் உள்ள வரிகளை பிரதமர் மோடி படித்திருந்தால் தமிழ்நாட்டிற்கு எதிராக அவர் செயல்பட மாட்டார்.
ஐந்து பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமாக செயல்படும் பிரதமர் மோடி, மூன்று கறுப்பு சட்டங்களைக் கொண்டுவந்து விவசாயிகளை அழிக்கப் பார்க்கிறார்.
ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்று சொல்லி தமிழ், பஞ்சாபி, பெங்காலி போன்ற மொழிகளை புறக்கணிக்கிறார். பிரதமர் மோடி தமிழ்நாட்டை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் ஆக இருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து எழுப்பப்பட்ட ஊழல் புகார்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொள்ளாமல் இருப்பது இதனால்தான்.
எதிர்வரும் தேர்தலில் பிரதமர் கையில் இருக்கும் ரிமோட் கண்ட்ரோலில் உள்ள பேட்டரிகளை எடுக்கும் வேலையை தமிழ்நாடு வாக்காளர்கள் மேற்கொள்ளவேண்டும். எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றத்தை கொண்டுவரும் தேர்தலாக அமைய வேண்டும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் தமிழ்நாடு மக்களுக்கு எதிரானது, மக்களை பலவீனப்படுத்த கூடியது. எனவே அதனை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாடு மக்களே தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய உரிமை படைத்தவர்கள்.
தமிழ்நாடு மக்கள் மீது எப்பொழுதும் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். அது எனது வரலாற்று கடமை, எனது பாட்டி, தந்தை வழியாக நான் அதை எப்பொழுதும் மறவாமல் இருப்பேன். நான் இறக்கும் வரையில் தமிழ்நாடு மக்களின் பாதுகாவலனாக டெல்லியில் இருந்தபடி செயல்படுவேன்” என்று பேசி முடித்த பின்னர் நன்றி என தமிழில் சொல்லி முடித்தார் ராகுல் காந்தி.
இதையும் படிங்க:தமிழ் கலாசாரத்தை பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: ராகுல் காந்தி