கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் பிப்ரவரி 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கலந்து கொண்டு வாங்கல் காவிரி ஆற்றில் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் மணல் குவாரியில் சட்ட நடைமுறை முறை பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய பிப்ரவரி 26ஆம் தேதி காலை 10 மணிக்கு மணல் குவாரிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தார்.
பின்னர், ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் அளித்த பேட்டியில், 'கரூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடி சமூக சொத்தை பாதுகாத்த விவசாயி ஜெகநாதன் படுகொலைக்கு இதுவரை அரசு நீதி வழங்கவில்லை. குறைந்தபட்சம் நிவாரணத் தொகை கூட இதுவரை அளிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைச் செயலாளராக பதவி வகித்த விவசாயி ஜெகநாதன் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அரவக்குறிச்சி சட்டப்பேரவை திமுக உறுப்பினர் இளங்கோ, கரூர் மாவட்ட திமுக செயலாளரும் மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று குடும்பத்திற்கு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. அரசின் பல கோடி ரூபாய் சொத்தை பாதுகாக்க போராடிய சமூக செயல்பாட்டாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முதலமைச்சருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என சில ஐஏஎஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே, தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக நாளை பிப்ரவரி 25ஆம் தேதி ஈரோடு மாநகருக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை இட ஒதுக்கி தரப்படவில்லை. திட்டமிட்டபடி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க கருப்புக்கொடி ஏந்தி சாமானிய மக்கள் நலக்கட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் போராட்டம் நடத்தும்.
இதேபோல கோவையைச்சேர்ந்த பள்ளி மாணவி சாந்தலா கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் செங்கல் சூளை நிறுவனங்கள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள கணவாய்பகுதி தடாகம் ஆகிய இடங்களில் யானை வழித்தடங்களில் செல்லும் இடங்களில் மண்வெட்டி எடுத்தது தொடர்பாக ஆவணப்படுத்தச் சென்றபோது, அவரும் அவருடன் சென்ற சமூக செயல்பாட்டாளர்கள் மேக் மோகன், கணேசன் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை மருத்துவமனையில் பார்க்க சென்ற சாந்தலாவின் தகப்பனார் மற்றும் மருத்துவர் ரமேஷ் ஆகியோர் தாக்கப்பட்டனர். கடந்த ஓராண்டு கடந்த பிறகும் இதுவரை காவல்துறை எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல ஈரோடு மாவட்டம், பெருந்துறை சென்னிமலை தென்புறம் எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் மாமாங்கம் குளத்தில் அரசு சொத்தை 16 கோடி ரூபாய் மதிப்புள்ள கற்களை வெட்டி எடுத்த விவகாரம் தொடர்பாக ஆதாரத்துடன் எடுத்துரைத்த சமூக செயல்பாட்டாளர் தமிழ்ச்செல்வனை கல்குவாரி உரிமையாளர்கள் ஏவிவிட்ட கூலிப்படையினர் கடந்த மே மாதம் 4ம் தேதி தாக்கியது குறித்து புகார் அளித்தும் கல்குவாரி உரிமையாளர்களின் மீது எவ்வளவு நடவடிக்கையும் இதுவரை காவல்துறை எடுக்கவில்லை.
இது மட்டுமின்றி கனிமக் கொள்ளையை எதிர்த்ததற்காக அரசு சொத்து கொள்ளை போகாமல் தடுப்பதற்காக தகவல் அறியும் சட்டத்தில் விவரங்கள் கேட்ட தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உடன்குடி குணசீலன், சமூக ஆர்வலர் ஸ்ரீவைகுண்டம் முத்துச்செல்வன், சட்டவிராத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சண்முகம், லா பவுண்டேஷன் வாசுதேவன், கரூர் தமிழ்கவி உள்ளிட்டோர் தாக்கப்பட்டது குறித்து புகார் அளித்தும் காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தமிழகமெங்கும் சமூக செயல்பாட்டாளர்களின் உயிருக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத அவல நிலை நிலவி வருகிறது. எனவே, சமூக செயல்பாட்டாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் சமூக செயல்பாட்டாளர்கள் மீது நடைபெற்ற அனைத்து தாக்குதல் சம்பவங்களுக்கும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க வரும் பிப்ரவரி 25ஆம் தேதி நாளை ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளோம். திட்டமிட்டபடி நாளை தமிழக முதலமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்’ என சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தெரிவித்தார்.
முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்! - செந்தில் பாலாஜி
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு நாளை பிப்ரவரி 25ஆம் தேதி வருகை தரும் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தெரிவித்துள்ளார்.
Etv Bharat