கரூர்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கான இரண்டு நாள் பயிலரங்கு கரூர் உழவர் சந்தை அருகே உள்ள நாரதகான சபை மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் எம்.கே. முருகன் தலைமையில் நடைபெற்றது.
பயிலரங்கில் முதல் நாள் அமர்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தமிழில் ''முற்போக்கு தடயங்கள்'' என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மதிய அமர்வில் ''கல்விக் கொள்கை எதிர்நோக்கும் சவால்கள்'' என்ற தலைப்பில், பொது பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கருத்துரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்குப் பிரின்ஸ் கஜேந்திரபாபு பிரத்யேகப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ''தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பினைச் சேர்ந்த ஆசிரியர்கள் தொடக்கத்தில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை வலுப்படுத்துவதற்கும் கட்டணமில்லா கல்வியை எல்லோருக்கும் அரசு வழங்க முன் வர வேண்டும் என வலியுறுத்தும் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் நான் கரூரில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.
தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது அரசுப் பள்ளிகளை பலகீனப்படுத்தக்கூடிய ஒன்றாகும். தேசிய கல்விக் கொள்கை வரைவில் அரசு பள்ளி, தனியார் பள்ளி என்ற இரண்டு பிரிவுகளைப் பற்றி தான், விவரிக்கிறது. ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி என்ற ஒன்றைப் பற்றி அதில் பேசப்படவில்லை. ஆகவே, அரசு உதவி பெறும் பள்ளிகளை முற்றிலுமாக அழித்து விடுவது, அரசுப் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக பலகீனப்படுத்துவது, இத்தகைய சூழ்நிலையில் மொத்த கல்வியையும் தனியார் வசம் ஒப்படைப்பது ஆகியவைதான் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நோக்கமாக உள்ளது.
ஏற்கனவே உள்ள கல்விக் கொள்கையில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை என்ற நடைமுறை அமலில் உள்ளது. இதன் மூலம் கல்லூரிக்குச் செல்வதற்கு நுழைவுவாயிலாகப் பள்ளிகள் உள்ளன. ஆனால், இந்த கட்டமைப்பை சிதைத்து விட்டு தேசிய கல்விக்கொள்கை மூலம் 5+3+4 என்ற முறையில் ஊக்கப்படுத்துவதால் ஐந்து வயதுக்கு முன்னரே வணிக ரீதியாக இயங்கக்கூடிய விளையாட்டுப் பள்ளிகளை ஊக்கப்படுத்தக் கூடியதாக உள்ளது.
முறையில்லாத கல்வியை அமல்படுத்துவதற்காக யுஜிசி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள The National Credit Framework என்ற ஆவணத்தையும் , தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு என்.சி.எப் (National Curriculum Frame work) என்ற ஆவணத்தையும் ஆய்வு செய்து பார்த்ததில், பள்ளிகளில் துவங்கி கல்லூரி வரை, வீட்டிலிருந்து கற்றுக்கொண்ட செயல்முறைகள் மற்றும் மரபு வழியாக கற்றுக்கொண்ட அறிவு என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக பள்ளிக்குச்சென்று பாடம் கற்கும் முறையை அகற்றி, கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிக் கல்வியை சிதைத்து, ஆசிரியர் என்ற பணியிடமே ஒன்று தேவை இருக்காது என்ற புது சிக்கல்களை உருவாக்கியுள்ளது. மொத்த கல்வியையும் எண்ணறிவு, எழுத்தறிவு என சுருக்கும் நிலைக்குச் செல்ல உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறது.
ஒருபுறம் ஒன்றிய அரசு, நடைமுறைப்படுத்த உள்ள தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறும் தமிழக அரசு, மறுபுறம் ''நான் முதல்வன் திட்டம்'', ''எண்ணும் எழுத்தும் திட்டம்'', ''இல்லம் தேடி கல்வி'' என தனது கட்சி தொண்டர்களை வைத்து, பள்ளிப் பாடங்களை நடத்தி முடிக்கலாம் என நினைக்கிறது. தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழக முதலமைச்சருக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020 வரைவு அறிக்கை சென்றடைந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் வலுப்படுத்த வேண்டும். அதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் பாதகமாக இருக்கும் விதிகளை அமல்படுத்தக்கூடாது என்பதே தமிழக ஆசிரியர்கள் முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது'' எனத் தெரிவித்தார்.