கரூர்:"தூய்மை கரூர்"- ஒரு வார்டு ஒருநாள் முகாம் என்ற அடிப்படையில் கரூர் நகராட்சி முழுவதும் அதிகாலை நேரத்தில் நடைபெறும் தூய்மை பணிகளை ஆய்வு செய்துவருவதன் இரண்டாவது நாளாக இன்று (அக்.12) கரூர் பசுபதிபாளையம் அருணாச்சல நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீதி வீதியாயாக நடந்து சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் வழிநெடுக கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு பரிந்துரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரூர் நகராட்சியில் மாதக்கணக்கில் சாக்கடை தூர்வாருதல், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகள் நடைபெறாமல் இருப்பதை கருத்தில் கொண்டு “தூய்மை கரூர்” என்ற திட்டத்தின் மூலம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கரூர் நகராட்சி வார்டுகளில் 3 ஆயிரத்து 580 தெருவிளக்குகள் உள்ளன. இவற்றில் தற்போது ஆயிரத்து 575 தெருவிளக்குகள் புதிதாக பழுது நீக்கப்பட்டுள்ளன. 100 மீட்டர் இடைவெளிக்கு ஒரு தெரு விளக்கு அமைப்பதற்கு 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2ஆயிரத்து 300 புதிய தெருவிளக்குகள் அமைப்பதற்கான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. கரூர் நகராட்சியில் இது புது முயற்சியாகும்” எனத் தெரிவித்தார்.
பருவமழையை எதிர்கொள்ள தயார்
மேலும், பருவ மழையை எதிர்கொள்வதற்கு மின்சாரத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அமைச்சர், “ஒரு லட்சம் மின் கம்பங்கள், மின் தளவாடங்கள் தயாரான நிலையில் இருக்கின்றன. பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரத்துறை பொருத்தவரையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.