பொங்கல் திருநாளன்று வீடுதோறும் மண்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம். நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி அனைத்து குடும்பங்களிலும் மண்பானையில் பொங்கல் வைப்பது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாக உள்ளது.
மேலும் புதுமண தம்பதியர் பெண் வீட்டிலிருந்து பொங்கலுக்கு கொடுக்கும் சீர்வரிசைப் பொருள்களில் மண்பானையும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியில் வயதான தம்பதியினர் பொங்கல் மண்பானை தயாரிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வண்டி சக்கரத்தில் மண்பானை செய்து, மர கலப்பையைக் கொண்டு அதற்கு வடிவம் கொடுத்து வெயிலில் காய வைத்து, முழுமைபெற்ற பொங்கல் பானையை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து கணவர் குயவன் கனகராஜ் கூறுகையில், ஐந்து வயதில் மண்பாண்டம் செய்யக் கற்றுக் கொண்டு 20 வயதில் தனியாக தொழில்தொடங்கி மண்பானைகளை செய்து வருகிறார்.
தன்னுடைய படைப்பில் ஜாடி, அடுப்பு, குடுவை, அகல் விளக்கு உள்ளிட்டவை செய்வதில் அதிக ஆர்வம் உள்ளது. ஆனால், தற்போது பொதுமக்கள் மண்பாணை பயன்படுத்துவதை தவிர்த்து பிளாஸ்டிக், சில்வர் உள்ளிட்ட நவீன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது.