கரூர்:கரூரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்.பி ஜோதிமணி பேசுகையில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், சி.வி.ரமணா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்ட நான்கு பேர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தமிழக அரசு ஆளுநருக்கு அனுமதி கோரி அனுப்பிருந்த கோப்புகளில், ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் கையொப்பம் இடவில்லை.
இப்போது தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், சி.விஜயபாஸ்கர், சி.வி.ரமணா ஆகியோர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கரூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கு கோப்புகள் எதுவும் வரவில்லை என்று, கடந்த ஜூலை 7ஆம் தேதி ஆளுநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தார்.
தற்போது, உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கு விசாரிக்க அனுமதி கோரிய கோப்பு கடந்த மே 15ஆம் தேதி அன்று வந்தது என கூறியுள்ளார். ஏன் இவ்வாறு பொய்யான தகவலை ஆளுநர் கூற வேண்டும்?
இதற்கு பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பதை கேட்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், இந்த மர்மத்தின் பின்னணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருக்கிறார் என்ற கேள்வியை எழுப்ப வேண்டி உள்ளது. அதிமுக தொண்டர்கள், பாரதிய ஜனதா கட்சி, அதிமுக என்ற கட்சியை அழித்துவிடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால், கரூர் மாவட்டத்தில் மட்டும் அதிமுகவுக்கும், பாஜக கட்சிக்கும் இடையே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அரசியல் ஏற்பட்டுள்ளது.