கரூர்:கரூர் மாவட்டத்தில் அரசு சார்பில் காவிரி ஆற்றில் மண்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வாங்கல் மல்லம்பாளையம், என்.புதூர் ஆகிய இரண்டு இடங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டு வருவதாக எழுந்த புகாரை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்.12ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.
இதனால் தற்காலிகமாக கரூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு மணல் குவாரிகள் இரண்டும் செயல்படாமல், தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மண்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட நெரூர், அச்சமபுரம் ஆகிய பகுதிகளில் மேலும் இரண்டு அரசு மணல் குவாரிகள் அமைப்பதற்கு பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (அக்.4) கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புகலூர் வாய்க்கால் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அதிமுக கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் “புதிய மணல் குவாரிகள் அமைப்பதால் நிலத்தடி நீர்மட்டத்தில் பாதிப்பு ஏற்படும்.
அரசு லாரிகளில் மணல் அள்ளி விற்பனை செய்வதில் விதிமுறை மீறல்களால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியும் மணல் அள்ளப்படுகிறது. எனவே, புதிய அரசு மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது” என தெரிவித்தார்.
இதேபோல காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் விஜயன், சண்முகம், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பல்வேறு ஆதாரங்களை கருத்து கேட்பு கூட்டத்தில் எடுத்துக்காட்டி மணல் குவாரி அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். பாமக, நாம் தமிழர் கட்சி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு புதிய மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு 50 ஆண்டுகளில் பாலைவனமாக மாறி இருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் அமலாக்கத்துறை சோதனை செய்து பல்வேறு முறைகேடுகளை கண்டறிந்துள்ளது.