கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருந்தும் பொதுமக்கள் பலரும் வெளியில் சுற்றி வருகின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாகனங்களுக்கு வண்ணம் பூசும் பணி தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கரூரில் பொதுமக்களின் வாகனங்களுக்கு வண்ணம் பூசும் பணியை மாவட்ட காவல் துறையினர் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பேசுகையில், ''இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் நீல வண்ணம் பூசப்பட்டால் திங்கள், வெள்ளி ஆகிய நாள்களிலும், சிவப்பு வண்ணம் பூசப்பட்டால் செவ்வாய், சனி ஆகிய நாள்களிலும், பச்சை வண்ணம் பூசப்பட்டால் புதன், ஞாயிறு ஆகிய நாள்களிலும் வெளியில் வர அனுமதிக்கப்படுவார்கள்.
கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் இந்த வாகனங்கள் மற்ற நாள்களில் வெளியில் வருவதைக் கண்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க:கோவிட்-19: காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடவடிக்கைகள் சிறப்பு; ராகுல் பெருமிதம்