தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அரசாங்க பணம் எப்படி வீணாகிறது பாருங்கள்’- கிராம மக்கள் குற்றச்சாட்டு! - கரூர் மாவட்ட செய்திகள்

கரூர்: தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது புதிதாக கட்டிய தண்ணீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், அரசாங்கத்தின் பணம் வீணாவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

தண்ணீர் கசியும் ப்திய தண்ணீர் தொட்டி
தண்ணீர் கசியும் ப்திய தண்ணீர் தொட்டி

By

Published : May 22, 2020, 5:46 PM IST

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கடவூர் ஊராட்சி ஒன்றியம், கிழக்கு அய்யம்பாளையத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அப்பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு இருந்துவந்தது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்ற அரசு, தற்போது மாவட்ட ஊராட்சி குழு 2018-19ஆம் ஆண்டிற்கான நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது. அந்த தொட்டியை மாவட்ட நிர்வாகம் இன்று திறக்கவிருந்த நிலையில் நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. அந்த சமயம் நீர்த்தேக்கத் தொட்டியில் ஆங்காங்கு விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசியத்தொடங்கியது. இதனால் இன்று திறக்கவிருந்த நீர்த்தேக்கத் தொட்டி திறக்கப்படவில்லை.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் இன்று தண்ணீர் பிடிக்க ஆவலுடன் குடங்களுடன் காத்திருந்தனர். ஆனால், அவர்களின் ஆர்வம் இறுதியில் ஏமாற்றத்தில் முடிந்தது. இது குறித்து கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலிடம் பொதுமக்கள் கேட்டபோது, இன்னும் உங்களிடம் இந்த தொட்டியை ஒப்படைக்கவில்லை என்று ஆவேசமாக பேசியுள்ளார். இதனால், பொதுமக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்களுக்கு குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. ஐந்து ஆண்டுகளாக தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.

தண்ணீர் கசியும் ப்திய தண்ணீர் தொட்டி

இன்று திறக்கப்படவிருந்த இந்த தண்ணீர் தொட்டி விரிசல் விட்டு தண்ணீர் கசியத்தொடங்கியது. இது கட்டிய கொத்தனார் மீது தவறா அல்லது பொறியாளர் மீது தவறா எனத் தெரியவில்லை. இருந்தாலும் அரசினுடைய காசு எப்படி வீணாகிறது என்று நீங்கள் பார்க்கிறீர்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க:பல்நோக்கு கட்டடம், அம்மா குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கிவைப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details