கரூர்: பரமத்தி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்னிலை, கூடலூர் மேற்கு ஊராட்சியில் ‘பகவதியம்மன் ப்ளூ மெட்டல் மற்றும் ரப் ஸ்டோன் கல்குவாரி’, தென்னிலை கிழக்கு ஊராட்சியில் ‘ஸ்ரீவெங்கடரமண சுவாமி ப்ளூ மெட்டல் ரப் ஸ்டோன் கல்குவாரி’ ஆகிய இரண்டு தனியார் கல்குவாரிகள் அமைப்பதற்கு அரசிடம் அனுமதி வேண்டி விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த விண்ணப்பத்தின் பேரில் அனுமதியளிப்பது தொடர்பாக அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்துக் கேட்பு கூட்டம் க.பரமத்தி காட்டுமுன்னூர் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஆக. 26) வருவாய் அலுவலர் லியாகத் தலைமையில் நடைபெற்றது.
கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு
இக்கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், கனிம வளத்துறை அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, அப்பகுதியில் அமையவுள்ள கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அலுவலர்களை முற்றுகையிட்டனர்.
மேலும், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கலந்துகொண்டு கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருத்தினைப் பதிவு செய்தார்.