கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காமராஜ் தெருவில் வசித்துவருபவர் ஜோதிமணி, இவருடைய மனைவி தனலட்சுமி. இந்தத் தம்பதியினரின் 17 வயது மகள் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாந்தோணி மலையிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கீதாவை காணவில்லை என்று அருகிலிருந்த உறவினர்கள் வீட்டிலும், நண்பர்கள் வீட்டிலும் பெற்றோர்கள் தேடியுள்ளனர். ஆனால், தனது மகள் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்காததால், பெற்றோர்கள் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், முதற்கட்ட விசாரணையில், கீதாவுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (20) என்பவருக்கும் டிக் டாக் செயலி மூலம் காதல் ஏற்பட்டது தெரியவந்தது.