கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவை சேர்ந்த கோடங்கி பொம்மாநாயக்கர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல் செய்த மனுவில், "கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா கோமாளிப்பாறை கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களுக்கும் மேல் உள்ளது. இந்த கிராமத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.
18 ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலை நகராட்சியினர் கோமாளிப்பாறை கிராமத்தில் உள்ள புல எண்கள். 104/2B, 105/3A2 - பட்டா எண் 2137 -ஐ விலைக்கு வாங்கி அதில் குளித்தலை நகராட்சியில் சேரும் குப்பைகளை கொட்டி வந்தனர். இந்த குப்பைகளிலிருந்து விசப்பூச்சிகளும், வண்டுகளும் உருவாகின.
துர்நாற்றம் வீசுகிறது, குப்பைகள் காற்றில் பறந்து எங்கள் கிராமத்தின் தெருக்கள், வீடுகளுக்குள் நுழைந்து குடிநீர் மற்றும் உணவு பொருட்களில் விழுந்து விச காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற வியாதிகள் ஏற்படுகிறது. கிராம மக்களுக்கு உடல் நலத்திற்கு பல்வேறு வகையில் கேடு விளைவிக்கிறது.
தற்போது, குளித்தலை நகராட்சியினர் மேலே சொல்லியுள்ள இடத்தில் பெரிய ஆழமான குழி தோண்டி அதில் குளித்தலை நகராட்சியில் இருந்து சாக்கடை கழிவுநீரை கொண்டு வந்து கொட்டி நிரப்புகிறார்கள். இதனால், எங்கள் கிராமத்தின் நிலத்தடி நீரானது கெட்டு போய் நிறம் மாறி குடிக்க, குளிக்க, விவசாயத்திற்கு என எதற்கும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா கோமாளிப்பாறை கிராமத்தில் குப்பைகளையும், கழிவு நீரையும் கொட்டி சுகாதராக் கேட்டினையும், மக்களின் உடல்நலத்திற்கு, ஊரின் அமைதிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் குளித்தலை நகராட்சியினர் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 133(b) -ன் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு நேற்று (ஜனவரி 23) விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி தரப்பில், சுற்றுசுழல் துறையின் அனுமதி பெற்று முறைபடி குப்பை கொட்டப்படுகிறது என்று வாதிடப்பட்டது. அதன்பின் நீதிபதிகள், 'மனுதாரர் சுற்றுச்சூழல் துறையிடம் கோமாளிப்பாறை கிராமத்தில் குப்பை கொட்ட நகராட்சிக்கு வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கலாம் என்று அறிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: "முள்முனையில் 3 குளம் வெட்டி வச்சேன்" - பாஜக குறித்து ஆ.ராசா பாடல்