கரூர்: அதிமுக தலைமையை கைப்பற்றுவதற்கு ஈபிஎஸ் ஓபிஎஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அதிமுக கட்சிக்குள் தனக்கு இருக்கும் வலிமையை நிரூபிக்கும் விதமாக, தனது ஆதரவாளர்களின் பட்டியலை ஓபிஎஸ் அறிவித்து வருகிறார். இந்நிலையில், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ், அதிமுகவின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதும், ஒபிஎஸ் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றார்.
இந்த சூழலில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை சந்தித்து, ஆதரவு திரட்டும் பணியில், தீவிரம் காட்டி வருகிறார். இதன் தொடர்ச்சியாக கரூரில் நவ.27ஆம் தேதி ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி ஓபிஎஸ் ஆதரவாளர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், “அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எதுவும் நடக்கப்போவதில்லை. ஈபிஎஸ் பூச்சாண்டி காட்டி வருகிறார். அதிமுக விரைவில் ஓபிஎஸ் தலைமையில் காப்பாற்றப்படும். அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை அண்ணாவுக்கு பிறகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காப்பாற்றினார். பின்னால் அவருக்கு பிறகு அம்மா மீட்டெடுத்தார்.
ஓபிஎஸ் ஆதரவாளர் கொந்தளிப்பு இதனைத்தொடர்ந்து அனைத்து தலைவர்களின் ஆசியினால் பிறகு ஓபிஎஸ் என்னும் மாபெரும் தலைவர் அதிமுக எனும் இயக்கத்தை மீட்டெடுக்க உருவாகி இருக்கிறார். அவரது தலைமையில் அதிமுக நிச்சயம் மீட்டெடுக்கப்படும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஈபிஎஸ் பின்னால் பணம் உள்ளது என ஒரு கூட்டம் சுற்றுகிறது. அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஏனெனில் அதிமுக எனும் கட்சி அவர்களுக்கு சொந்தமானது இல்லை” என்றார்.
டிசம்பர் 5ஆம் தேதி நினைவு தினத்தன்று அதிமுக அரசியலில் மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது குறித்து ஈடிவி நிருபர் கேட்டதற்கு பதில் அளித்த புகழேந்தி, “சென்னையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக கூட உள்ளோம். நாடு போற்றும் திட்டங்களை தந்த முன்னாள் முதலமைச்சருக்கு தமிழ்நாடு முழுவதும் நினைவஞ்சலி செலுத்தப்பட உள்ளது. அவர்கள் இணைவார்கள் இவர்கள் இணைவார்கள் என்ற செய்திகள் உருவாக்கப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
அதிமுகவின் தொண்டர்கள் ஈபிஎஸ் இடம் மட்டுமே உள்ளதாக கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்த பின்பு, தொண்டர்கள் ஈபிஎஸ் இடம் தான் உள்ளது என கூறுவது சரியல்ல. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பெறுவதற்கு ஈபிஎஸ் துடிக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் பதவி காலியாகவே இருக்கும் எனக் கூறிவிட்டு அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார் ஈபிஎஸ். இதனை அதிமுகவில் உள்ள தொண்டர்கள் ஈபிஎஸ்-ஐ பார்த்து கேட்க வேண்டும்.
பெங்களூர் சிறையில் இருந்த சின்னம்மா சசிகலாவை பார்க்க எடப்பாடி பழனிசாமியை தான் காரில் அழைத்துச் சென்றேன். அங்கு காலில் விழுந்த எடப்பாடி பழனிசாமி, எந்திரிக்கவே இல்லை. தேம்பித் தேம்பி அழுது, பழனிசாமி முதலமைச்சர் பதவியை பெற்றார். துரோகத்தை இழைத்தவர் பழனிசாமி. அவரது நெற்றியில் துரோகி என்று எழுதப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தமிழக ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை தமிழகம் முழுவதும் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஈபிஎஸ், தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் சட்டவிரோதமாக பார்களில் மது விற்பனை நடைபெறுகிறது என்பதை கூற முடியவில்லை.
ஆங்கிலத்தில் நான்கு வார்த்தைகளை மட்டுமே தெரிந்து வைத்துள்ள ஈபிஎஸ், இந்திய அரசியலமைப்பு சட்ட மாமேதை அம்பேத்கர் முழு பெயரை கூட கூற முடியாதவர். செய்தியாளர் சந்திப்பில் ஈபிஎஸ் எழுதி வைத்து பேசும் பக்கங்கள் மாறியதால், அம்பேத்கர் தூக்கிலிடப்பட்டார் என்று தவறாக கூறுகிறார். இதே போல கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என்று ஏற்கனவே ஒரு முறை பேசியவர் ஈபிஎஸ். இதேபோல லாஸ் ஏஞ்சல்ஸ் என்று ஆங்கிலத்தில் அமெரிக்க தலைநகர் பெயரை சரியாக சொல்ல தெரியாத ஈபிஎஸ் ஒரு காமெடி பீஸ்.
ஓபிஎஸ் தலைமையில் அதிமுக வெற்றி நடை போடும் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. கரூர் மாவட்டத்தை பொருத்த வரையில் அதிமுக என்ற கட்சி இல்லை. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். அதன் பின்னர் கொங்கு மண்டலத்தின் எல்லையான, கரூர் மாவட்டத்தில் அதிமுகவின் கோட்டையாக கரூர் மீண்டும் மாறும். எங்களுக்கு போட்டி அதிமுக அல்ல. திமுகவும் செந்தில்பாலாஜியும் தான்” என்றார்.
இதையும் படிங்க: திமுகவில் அரசியல் வாரிசு கட்டாயம் - கடம்பூர் ராஜு