கரூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் வேலாயுதம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பிப். 10ஆம் தேதி இரவு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 'தமிழ்நாட்டில் 30 ஆண்டுகள் காலம் ஆட்சி செய்த வரலாறு அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. 1.5 கோடிக்கும் அதிகமான தூயத் தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக.
வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத ஆட்சி
வீடு இல்லாத ஏழைகளுக்கு 5.5 லட்சம் வீடுகளை வழங்கியது. ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு 10 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது. ஆனால், பத்தே மாதத்தில் திமுகவின் சாயம் வெளுத்து விட்டது.
திமுக ஆட்சி என்பது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத ஆட்சி. பொய்யான வாக்குறுதிகளை அளித்த அவல ஆட்சி. நீட் தேர்வு ரத்தை முதல் கையெழுத்திடுவதாகக் கூறினார்கள். அதனை நிறைவேற்ற முடியாத கையாலாகாத ஆட்சி.
நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கையும். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக கூட்டணி அரசுதான்.