கரூர்: திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ - பத்மாவதி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பிப்.26 ஆம் தேதி (நேற்று) வீட்டிற்கு அருகில் உள்ள பொதுக் குழாயில் பத்மாவதி தனி குழாய் மூலம் தண்ணீரை தனது வீட்டிற்கு ஏற்றியுள்ளார். அதேபோல் பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து வரும் கார்த்தி என்பவரின் மனைவியும், பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வாய் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இருவருக்கு ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து கார்த்தியின் மனைவி, கார்த்தியிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கார்த்தி, இளங்கோவின் வீட்டிற்கு சென்று, மாநகராட்சி பொதுக் குழாயில் தனியாக வீட்டுக்கு குழாய் மூலம் தண்ணீர் நிரப்புவது தவறு என கூறியுள்ளார். ஆனால் இளங்கோ மற்றும் பத்மாவதி ஆகியோர் கார்த்திக்கிடம் மேலும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி கசாப்பு கடை அரிவாளால் இளங்கோவையும், அவரது மனைவி பத்மாவதியும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. இளங்கோவனுக்கு கையிலும், பத்மாவதிக்கு தலையில் பலமாக அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இந்நிலையில் பலத்த காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.