கரூர் : திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் பள்ளி கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்து மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பள்ளி கல்வித் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இடிந்து விழும் நிலையிலுள்ள அரசுப் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 18 பள்ளிகளில் 20 வகுப்பறை கட்டடங்கள் கண்டறியபட்டுள்ளன. குளித்தலையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பழுதடைந்த வகுப்பறை கட்டடத்தை இடிக்கும் பணிகளையும் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கரூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிகளிலுள்ள கட்டட உறுதித்தன்மையை அறிந்து அதற்கு ஏற்றார்போல் நடவடிக்கைகள் மேற்கொள்ள சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறைகளில் கட்டுப்பாட்டிலுள்ள அரசுப் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய அந்தந்த துறை அலுவலர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.