தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு பழுது - உடனடியாக குடியிருப்பு வாசிகள் வெளியேறும்படி நோட்டீஸ்! - கரூர் மாவட்ட செய்திகள்

கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக உடனடியாக குடியிருப்பு வாசிகளை வெளியேறும்படி அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மாற்று இடம் அமைத்து தராவிட்டால் வெளியேற மாட்டோம் என குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு பழுது
கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு பழுது

By

Published : Oct 2, 2021, 1:42 AM IST

கரூர்: நகராட்சிக்குட்பட்ட கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த குடியிருப்பில் பெரும்பாலும் பட்டியலின மக்கள் அதிக அளவில் குடியிருந்து வருகின்றனர். ஏ,பி,சி,டி என பிரிக்கப்பட்ட அடுத்தடுத்த கட்டடங்கள் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன.

புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் அமைத்து தரக் கோரி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இன்று (அக்.1) தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ஒன்றை அடுக்குமாடி குடியிருப்பில் அலுவலர்கள் ஒட்டிச் சென்றுள்ளனர். அந்த அறிவிப்பில், "கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு டி-ப்ளாக்கில் உள்ளவர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும். அப்படி காலி செய்யாத பட்சத்தில் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பொறுப்பேற்காது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியிருப்புவாசி லட்சுமி தங்கராஜ் கூறுகையில், "நான்கு தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகிறோம். இன்று திடீரென ஐந்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் வெள்ளை தாளை ஓட்டிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து பள்ளிக் குழந்தைகளை அழைத்து கேட்டு பின்னர் அறிந்துகொண்டோம்.

கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு பழுது

நாங்கள் தினந்தோறும் கூலி வேலை செய்து வருகிறோம். வாடகை வீட்டில் குடியிருக்கும் அளவுக்கு பொருளாதார வசதி கிடையாது. எனவே அரசு அலுவலர்கள் இங்குள்ள 110 குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் வழங்கி உதவிட வேண்டும்" என்றார்.

சர்மிளா என்பவர் கூறுகையில், "வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அவ்வப்போது இடிந்து விழுவதால் மரண பயத்தில் தினந்தோறும் வாழ்க்கை நடத்தி வருகிறோம். ஒரு வீட்டில் நான்குக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம். எனவே கூடுதல் அறைகள் கட்டி தர வேண்டும். விரைவாக மாற்று இடம் வழங்கிய பிறகு கட்டடப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

தற்போது கரூர் கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மக்களுக்கு விரைந்து மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையெனில் கட்டடத்தின் உறுதியற்ற தன்மையால் பேரிழப்பு ஏற்படும் என்பது உறுதி.

இதையும் படிங்க:'கழுத்தை நெரித்துள்ளீர்கள்' - விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details