கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 'கரூர் மாவட்டம் மட்டுமல்ல; தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஓராண்டு திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக்கண்டு முதலமைச்சராக மன நிறைவு அடைகிறேன். ஒவ்வொருவருக்கும் மனசாட்சி தான் நீதிபதி, அந்த வகையில் மக்கள் மனசாட்சி அளிக்கக்கூடிய தீர்ப்பு தான் நான் செல்லுகிற இடங்களில் மக்கள் முகமலர்ச்சியோடு வரவேற்பு அளிப்பதற்கு மற்றுருமொரு சாட்சி.
இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மக்களை முன்னேற்றும் ஆட்சியாக உள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. இதனால்தான் வீண் விமர்சனங்களுக்கு நான் ஊடகங்களில் பதில் அளிப்பதில்லை. எனது நேரத்தை வீண் செய்ய விரும்பவில்லை. நன்மை செய்வதற்கே நேரம் போதவில்லை.
தந்தை பெரியார் சொன்னதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர்: அக்கப்போர், அரைவேக்காடு விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல அவசியம் இல்லை. மானத்தைப் பற்றி கவலைப்படும் ஒரு நபருடன் போராடலாம். ஆனால், அதைப் பற்றி கவலைப்படாத ஒரு நபரிடம் நாம் போராட முடியாது என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.
அப்படி மானத்தைப் பற்றி கவலைப்படாத நபர்கள் வைக்கும் விமர்சனத்தைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை. திமுக ஆட்சி எப்படி செயல்படுகிறது என்று நல்ல மானமுள்ள மனிதர்களிடம் செய்தியாளர்கள் கேட்க வேண்டும் என உரிமையுடன் கேட்கிறேன். திமுக ஆட்சியில் பயன்பெற்ற மக்களிடம் பேட்டி காணுங்கள்.
'மீண்டும் மஞ்சப்பை இயக்கம்' மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பேட்டி காணுங்கள். சமூக நீதி, திமுக ஆட்சியில் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வருகிறது என்று சமூக நீதிக்காக போராடும் நபர்களிடம் கேளுங்கள். நியாயமான கோரிக்கையை யார் வைத்தாலும் அதனை நிறைவேற்றித் தருவதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
'வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் கூறமுடியாது':அனைவரின் கருத்துகளைக்கேட்டு, அதனை நிறைவேற்றித் தருவதற்கு தான் நான் இருக்கிறேனே தவிர, எனது கருத்துகளை அனைவரும் கேட்க வேண்டும் என நினைப்பவன் நான் அல்ல. ஊடகங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தாங்களும் இருக்கின்றோம் என காட்டிக்கொள்வதற்காக, ஊடகங்கள் முன்பு வாந்தி எடுப்பவர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கு நான் பதில் அளிக்க நான் என்றைக்கும் தயாராக இல்லை.
முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு என்னையும் திமுக இயக்கத்தையும் எதிர்த்து விமர்சனம் வைத்து அதன் மூலம் அவர்கள் வளரலாம் என்று நினைப்பவர்களைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன். கோடிக்கணக்கான தமிழ் மக்களின் வீட்டில் விளக்காகவும், அவர்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பவனாகவும் இருக்க விரும்புகிறேன். அன்பு,அறிவு, சேவை விளக்காக இருக்க விரும்புகிறேன்.
என்னை முதலமைச்சராக தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொண்டதற்கு காரணம் நான் நிச்சயம் நல்லது செய்வேன் என்ற நம்பிக்கை தான். அந்த நம்பிக்கை நிச்சயம் ஒவ்வொரு நாளும் நான் காப்பாற்றும் ஆட்சியாக 'திராவிட மாடல் ஆட்சி திகழும்' என கரூர் மண்ணில் வீரமாக சூளுரைக்கிறேன்' என்று பேசினார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஆதரவுகோரினார் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு!