கரூர் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின்கீழ் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் ரூ.3.10 லட்சம் மதிப்பில் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்.16) நடைபெற்றது. இதில் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கலந்துகொண்டு பயனாளர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, கரூர் தெற்கு நகர திமுக செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த ஜோதிமணி, "தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை அதிகரித்துவருவது துயரமும் வேதனையும் அளிக்கிறது. மாணவர்கள் துணிவோடும், நம்பிக்கையோடும் இருங்கள். ஒரு தேர்வு நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானித்து விடாது. நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் முக்கியப் பிரச்சினை; அதைத் தீர்க்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை.
ஜோதிமணி எம்பி செய்தியாளர் சந்திப்பு நீட் தேர்வு நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் போராடிக்கொண்டுள்ளோம். நிச்சயமாக நீட் அநீதிக்கு ஒருநாள் முடிவு கட்டப்படும். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அதிக மருத்துவக் கல்லூரிகள்
தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. வேறு மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில்கூட மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இல்லை. மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் உள்ளே நுழைந்து படித்து பயன் பெறுவதற்காக நீட் தேர்வை ஆதரிக்கின்றன.
தமிழ்நாட்டில் மக்கள் வரிப்பணத்தில், உழைப்பில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உரிமையுள்ளது. அந்த உரிமையைப் பெற்றுத் தருவதற்கு ஒன்றுசேர்ந்து போர்க்குரல் எழுப்புவோம். மாறாக மரண ஓலங்கள் ஒலிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்று மூன்று செங்கலை மூன்று ஆண்டுகளாக வைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசு நினைத்தால் பாஜக ஆளும் மாநிலங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரியைத் தொடங்க முடியும்.
ஆனால் அதனை மேற்கொள்ளாமல் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை மற்ற மாநில மாணவர்களுக்குப் பறித்துக் கொடுத்துவிட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதற்காக நீட் தேர்வை திணித்துவருகிறது. அதற்கு விரைவில் முடிவு கட்டப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: இடஒதுக்கீடு முதல் அனைத்திலும் பெரியாரின் கொள்கைப்படியே நடக்கும் அதிமுக'