கரூர்:தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன், கரூரில் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களில், நேற்று (நவ.16) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு குறைகளை கோரிக்கைகளாக முன் வைத்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், துாய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், தேசிய துாய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாலம்மாள்புரம் தூய்மைப் பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பில், பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா, சம்பளம் முறையாக குறித்த நேரத்தில் கொடுக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் பேசியதாவது, “துாய்மைப் பணியாளர்களின் நலனிற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தோரணக்கல்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில், 22 துாய்மைப் பணியாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 133 துாய்மைப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது பாலம்மாள்புரம் பகுதி குடியிருப்பில் நிரந்தர துாய்மைப் பணியாளர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருவதற்கு கோரிக்கையை வைத்துள்ளனர். எனவே, குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு, உடனடி நடவடிக்கையாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.