கரூர் மாவட்டம் காமராஜர் சிலை முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கருப்புக் கொடி ஏந்தி இன்று (ஏப்ரல் 1) போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவருடன் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் சக்திவேல், சாமானிய மக்கள் நல கட்சி மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் முகிலன் கூறுகையில், "தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வினை இனி மத்திய தேர்வாணையம் நடத்தும் என அமித்ஷா அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி தாயார் இறப்புக்கு இரங்கல் கடிதத்தை இந்தியில் அமித்ஷா அனுப்புகிறார். புகழூர் காவேரி ஆற்றின் நடுவே கதவணை கட்டுவதற்கு அமித்ஷா பணிகளை தொடங்கி வைத்துள்ளார். காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீரை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் புதிதாக கதவணை கட்டக்கூடாது.
மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் மத்திய அரசு டெல்டா பூமியை வறண்ட பூமியாக்க முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரம் பறிபோக உள்ளது. இதற்கெல்லாம் காரணமாக உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது" என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் பழனிசாமிக்கு கோவில்பட்டியில் எதிர்ப்பு