கரூர்: மஞ்சள் வெட்டும் கூலித் தொழிலாளிகளுக்கு உதவிய எம்.ஆர்.வி அறக்கட்டளையின் செயலை பொதுமக்களும், காவல் துறையினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த நல்லூர் கிராமத்தை சார்ந்தவர்கள் விவசாய பணிகளுக்காக பல்வேறு ஊர்களுக்கு கூலி வேலைக்கு செல்வது வழக்கம். இதேபோல் 144 தடை உத்தரவு போடுவதற்கு முன்பாக ஊரை விட்டு வெளியேறி, ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் வெட்டும் வேலைக்கு 3 ஆண்கள், 5 பெண்கள் சென்றுள்ளனர்.
மஞ்சள் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே 144 தடை உத்தரவு போடப்பட்டதால், அங்கேயே தங்கி கூலி வேலை செய்துவந்துள்ளனர். கரோனா பீதி காரணமாக பல உரிமையாளர்கள் தங்களின் நிலத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்யாததால், தொழிலாளர்கள் வேலை இல்லாமலும், கையில் வைத்திருந்த பணத்தை செலவு செய்துள்ளனர்.
இச்சூழலில் 144 தடை காலம் நீட்டிக்கப்பட்டதால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளான அவர்கள், ஈரோடு மாவட்டம் அம்மன் கோயில் பகுதியிலிருந்து புறப்பட்டு கால்நடையாக நடந்தும், ஒரு சில சரக்கு வாகனத்தின் உதவியுடன் கரூர் வந்தடைந்தனர். பின்பு அங்கிருந்து கிராமத்திற்கு நடந்து செல்ல திட்டமிட்டு திருக்காம்புலியூர் சுற்றுவளைவுப் பகுதியில் இருந்து, பேருந்து நிலையம் வரை நடந்து சென்று கொண்டிருந்தனர்.
பல மைல் தூரப் பயணம்! கூலி தொழிலாளர்களுக்கு உதவிய அறக்கட்டளை! அவர்களை தடுத்து நிறுத்திய கரூர் நகர காவல் துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான எம்.ஆர்.வி அறக்கட்டளை பொறுப்பாளர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் நேரில் சென்ற பொறுப்பாளர்கள், கூலித் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர், முகக் கவசம் கொடுத்ததுடன், தனியார் சுற்றுலா வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.