கரூர்: திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (பிப்ரவரி 13) கரூரில் எம்பி ஜோதிமணி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
கரூர் பசுபதிபாளையம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிருத்திகா பாலகிருஷ்ணனை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்ட ஜோதிமணி, "தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியை நடத்திவரும் திமுக அரசு கடந்த எட்டு மாதங்களில் 250 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாட்டில் வெள்ளத்தில் மக்கள் தத்தளித்தபோதும் கரோனா தொற்றால் மக்கள் மருத்துவமனையில் நிரம்பி வழிந்தபோது, நேரில் சென்று மக்களைக் காப்பாற்றிட களப் பணியாற்றிவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு தயங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் பாஜக மோடி அரசுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் என்றால், மக்கள் மன்றத்துக்கு ஜனநாயகத்தில் என்ன மதிப்பு உள்ளது?
அதிமுகவுக்குச் செலுத்தும் வாக்கு மோடிக்கு செலுத்தும் வாக்கு
நீட் தேர்வு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாஜக புறக்கணித்த ஒரு மணி நேரத்தில் அதிமுகவும் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கிறது என்றால், அதிமுக என்ற கட்சி எதற்கு, அதிமுகவை கலைத்துவிட்டு பாஜகவில் கட்சியை இணைத்துவிடலாம்.
அதிமுகவும் பாஜகவும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறுகின்றனர், நீங்கள் அதிமுகவுக்குச் செலுத்தும் வாக்கு மோடிக்குச் செலுத்தும் வாக்குதான். எனவே நீங்கள் இருவரையும் புறக்கணிக்க வேண்டும்.
அதிமுகவுக்குச் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் மோடி அரசுக்குச் செலுத்தும் வாக்கு திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 500 வாக்குறுதிகளில் 250 வாக்குறுதிகள் வெறும் எட்டு மாதத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு கண்டுகொள்ளாதபோது பதவியேற்ற 30 நாள்களுக்குள் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பேருந்து, தங்க நகைக் கடன் ரத்து, கரோனா நிவாரணத் தொகை ரூபாய் நான்கு ஆயிரம் போன்ற திட்டங்கள் மக்களுக்குப் பயனுள்ளதாக இருந்தன.
இதனால் கல்லூரி சென்று படிக்கும் பெண்களுக்கு, பணிக்குச் செல்லும் பெண்களுக்கு வருமானத்தின் பெரும் பகுதி பேருந்து கட்டணமாகச் செலவிட வேண்டிய சூழல் இருந்தது. அதனை மாற்றி நகரப் பேருந்துகளில் மகளிருக்கு அரசு இலவசப் பயணம் மேற்கொள்ள வழி ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் என்னைப் போன்று எளிய குடும்பத்தில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்று வாய்ப்பு வழங்கியதுபோல மாநகராட்சித் தேர்தலிலும் அதுபோன்று இளம் வேட்பாளர்களுக்கு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகளிலுள்ள வேட்பாளர்களைப் போல பணம் படைத்தவர்களாகவும் அரசியலை வைத்து பணம் சம்பாதிப்பவர்கள் ஆகவும் இல்லாமல் நேர்மை ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு நல்ல வாய்ப்பை காங்கிரஸ் கட்சி உருவாக்கிவருகிறது.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் நான்தான்!
கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களின் வீட்டின் கதவுகள் எப்பொழுதும் ஏழைகளுக்காகத் திறக்காது, அங்கு சென்று அமரவும் முடியாது. எனது எம்பி அலுவலகத்துக்கு வருகைதரும் ஏழை மக்களின் மனுக்களைப் பரிசீலனை செய்யும் எனது உதவியாளர் கிருத்திகா மாநகராட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் உங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கூடியவர். 24 வயதில் நேர்மையான அரசியலில் களம் காணும் அவருக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் ஏன் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடத்தப்படவில்லை என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மூன்று முறை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தலை நடத்த அதிமுக அரசுபோல இருக்காமல், திமுக அரசு பதவியேற்றவுடன் உச்ச நீதிமன்றம் தெரிவித்த தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே உள்ளாட்சித் தேர்தலை நடத்திட மிகத் தீவிரமாகத் தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி உள்ளது.
மேற்கு வங்கம் போன்ற மற்ற மாநிலங்கள் கரோனா மூன்றாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது என்று தயக்கம் காட்டிய நிலையில் திமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்திட தீவிரம் காட்டியது. சிறப்பான அரசு தமிழ்நாட்டில் நடத்திட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அவசியம் என்பதைத் தமிழ்நாடு முதலமைச்சர் உணர்ந்துள்ளார்.
குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு திட்டம்
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள நான்கு மாவட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகள் நாள்தோறும் பெறப்பட்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிவருகிறேன். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் இரண்டு முக்கியத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள விபத்துகளைத் தடுப்பதற்கு இரண்டு இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இப்பணிகள் தொடங்கப்பட்டாலும் தற்போது திமுக ஆட்சியில் மிக விரைவாகக் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
அதேபோல கரூர் மாநகராட்சியில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாள்தோறும் குடிநீர் வழங்கும் வகையில் அம்ருத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து உங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட மாநகராட்சி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்" எனப் பேசினார்.
இதையும் படிங்க:'உண்மை என்னவென்று தெரியாமல் இப்படிப் பேசிட்டீங்களே ஸ்டாலின்!'