கரூர்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 30ஆவது நினைவு நாளையொட்டி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை, கரூர் தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, அம்மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.அசோகனிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெய்வநாதன், மருத்துவமனை ஊழியர் கண்ணன், கரூர் மத்திய நகரத் தலைவர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் மெய்ஞான மூர்த்தி, இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி கூறியதாவது, "ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கரோனா தொற்றுள்ளவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை காங்கிரஸ் கட்சி வழங்கி வருகிறது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஐந்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும், வேடசந்தூர், விராலிமலை மருத்துவமனைகளுக்கு ஐந்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் வழங்கப்படுகின்றன.