தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யோகி ஆதித்யநாத் உருவ பொம்மையை எரித்த எம்.பி. ஜோதிமணி கைது - உருவபொம்மை

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உருவபொம்மையை கரூர் நாடாளுமன்ற எம்.பி. ஜோதிமணி காலால் எட்டி உதைத்து, தீவைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

_jothimani
_jothimani

By

Published : Oct 2, 2020, 6:08 AM IST

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அம்மாநில காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். இதனைக் கண்டித்தும், அவரை அவமரியாதை செய்யும்விதமாக ராகுல் காந்தியை கீழே தள்ளிவிட்டதைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உருவபொம்மையை கரூர் நாடாளுமன்ற எம்.பி. ஜோதிமணி காலால் எட்டி உதைத்து, தீவைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

சாலையில் அமர்ந்து மத்திய அரசைக் கண்டித்தும், மோடி அரசை பதவி விலக வேண்டும் எனக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்பு ஜோதிமணி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டனர்.

அதேபோல், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுரண்டை பகுதியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி தலைமையில் யோகி ஆதித்யநாத் உருவபொம்மையை எரித்து, கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நாமக்கல் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேருந்து நிலையம் முன்பாக பேருந்துகளைச் சிறைப்பிடித்து சாலை மறியல் ஈடுபட்டனர்.

அப்போது உத்தரப் பிரதேசம், மத்திய அரசுகள், உ.பி. காவல் துறையைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி ராஜா தியேட்டர் சிக்னல் அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச பாஜக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அம்மாநில முதலமைச்சர் யோகியின் உருவப்படத்தை எரிக்க முயன்றபோது காவல் துறையினர் 100-க்கும் மேற்பட்டோரை கைதுசெய்தனர்.

இதையும் படிங்க : சென்னை: சட்டவிரோதமாக சூதாட்டம்... ஏழு பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details