கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில் தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி, கல்வியறிவு மேம்பாடு குறித்து நேற்று (ஜன.3) மாலை பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டு, நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக எம்.பி ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கம் செய்து, புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளது மகிழ்ச்சி. ஆனால், தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்கத்தான் இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால், கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசு 25 விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதாக முடிவெடுத்துள்ளது. இதில் கோவை, சென்னை மற்றும் திருச்சி ஆகிய மூன்று விமான நிலையங்களும் தனியாருக்கு வழங்கப்படுவதற்காக பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியாருக்கு வழங்கும் பட்சத்தில், பிரதமர் மோடியின் நெருங்கிய கார்ப்பரேட் நண்பரான அதானிக்கு வழங்காமல் இருப்பாரே என தமிழக மக்களுக்கு பிரதமர் மோடியால் உறுதி அளிக்க முடியுமா? என்று கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. ஏற்கனவே மும்பை, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், லக்னோ, பெங்களூரு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள ஏழு விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.