கரூர்: ஈரோடு அருகே உள்ள சென்னிமலையைச் சேர்ந்தவர், கனகராஜ் (57).
இவர் கரூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக (கலால்) பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று (நவம்பர் 22) காலை கரூர் - திண்டுக்கல் சாலையில் உள்ள வெங்கட்கல்பட்டி மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுவந்தார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட கனகராஜ் முயன்றார். ஆனால், அந்த வேன் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
உயிரழந்த ஆர்டிஓ
வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட கனகராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தாந்தோனிமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கனகராஜ் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையிலான 5 தனிப்படை காவல் துறையினர் நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டு வந்தனர்.
வேன் கண்டுபிடிப்பு
அதனடிப்படையில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புத்தாம்பூர் சிப்காட் பூங்காவில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு ஆட்கள் ஏற்றிவரும் வேன் என்பதை கண்டறிந்தனர்.
தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய வேனை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வேனை ஓட்டி வந்த தோகைமலை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் (28) என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள வேன் ஓட்டுநர் சுரேஷ் குமார் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருச்சி அருகே இரவு ரோந்துப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் கரூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் வாகனம் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியாக வசித்துவரும் மூதாட்டியைக் கொல்ல முயற்சி: மூவருக்கு வலைவீச்சு