கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள செம்பியநத்தம் ஊராட்சி பூசாரிப்பட்டியைச் சேர்ந்த தம்பதி சக்திவேல் (35), சரண்யா (30). இவர்களது இரண்டு பெண் குழந்தைகள் கனிஷ்கா (6), புவிஷா (3).
தம்பதியர் இருவரும் கரூரில் உள்ள டெக்ஸ்ட் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளனர். கடந்த சில நாள்களாகக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக சரண்யா மட்டும் பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று விடியற்காலை சக்திவேல் கண்விழித்துப் பார்த்தபோது தனது இரண்டு பெண் குழந்தைகளும் மனைவியும் காணவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் எங்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை.
இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் கிணற்றில் தேடிப் பார்த்தபொழுது சரண்யா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இது குறித்து குஜிலியம்பாறை தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து சரண்யா (30), இளைய மகள் புவிஷா (3) ஆகியோரின் உடல்களைப் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.
ஆனால் காலை 7 மணி தொடங்கி காலை 10 மணி வரை மூன்று மணி நேரம் தேடியும் மூத்த மகள் கனிஷ்கா (6) உடல் இன்னும் மீட்கப்படவில்லை. தொடர்ந்து உடலைத் தேடும் பணி நடைபெற்றுவருகிறது.
முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த சரண்யாவின் கணவர் சக்திவேல் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், இது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சரண்யா தற்கொலைக்கு முயற்சித்தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை சரண்யா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கரூர் பாலவிடுதி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: முதுகுளத்தூர் மணிகண்டன் காவல் துறை துன்புறுத்தலால் மரணம்? - விசாரிக்கக் கோரும் அண்ணாமலை