கரூர் மாவட்டம் ராயனூர், ராம்நகரைச் சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (30), முத்துலட்சுமி (29) தம்பதியினர். இவர்களுக்கு ரக்ஷித் (3), தக்ஷித் (2 ) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கரூர் பரமத்தி அருகே பேக்கரி நடத்திவந்த பாலகிருஷ்ணன், கடன் பிரச்னையால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு தலைமறைவாகியுள்ளார்.
இதையடுத்து முத்துலட்சமி தனது பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் வசித்துவந்தார். நேற்று (ஆக்ஸ்ட் 9) முத்துலட்சுமியின் பெற்றோர்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ள நிலையில், இன்று காலை அவரது வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
கரூரில் நடந்த சோகம்: தாயுடன் பிஞ்சு குழந்தைகளும் உயிரிழப்பு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, முத்துலட்சுமி செல்போன் சார்ஜ் போட்ட நிலையில் எரிந்து சடலமாக கிடந்துள்ளார். பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும் புகையால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.
புகைப்படம்: உயிரிழந்த தாய் முத்துலட்சுமியும் மகன்களில் ஒருவரும் இதையடுத்து தாய், மகன்களின் உடலை மீட்ட காவல்துறையினர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாந்தோன்றிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் மின்கசிவால் இளைஞர் பலி!