கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில், பறக்கும்படையினர் இன்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கேரள பதிவு எண்ணுடன் வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டதில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 2 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து காரில் இருந்தவரிடம் விசாரித்ததில், அவர் கேரள மாநிலம் நெய்யாட்டின்கரா பகுதியைச் சேர்ந்த சாஜு (27) என்பது தெரியவந்தது. இதேப்போல கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அய்யம்பாளையம் என்ற இடத்தில் பறக்கும்படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புல்லான்விடுதியினைச் சேர்ந்த மாரிமுத்து, பேராவூரணியைச் சேர்ந்த அப்துல்மஷித் ஆகிய இருவரும் டாடா ஏசி வாகனத்தில் உரிய ஆவணமின்றி 82 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை அலுவலர்கள், அதை கிருஷ்ணராயபுரம் சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
கரூர் மாவட்டத்தில் இன்று மட்டும் இரு வேறு இடங்களில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் காவல் துறையினர், கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 6 லட்சத்து 3 ஆயிரத்து 800 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அறந்தாங்கியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்!