கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூரில் எம்எல்ஏ செந்தில்பாலாஜி அவரது வீட்டு முன்பு, கறுப்பு உடை அணிந்து சமூக விலகலை கடைபிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
இவருடன் கரூர் மக்களவை எம்.பி., ஜோதிமணி கலந்து கொண்டார். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, கடந்த 45 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன.
மது பிரியர்கள் 90% பேர் குடியை மறந்து, தங்களது குடும்பத்தோடு சந்தோஷமாக இருந்து வருவதாக குடும்ப பெண்கள் பலர் வலைதளங்களில் கூறும் செய்தி வைரலாகி வந்தது. மேலும், டாஸ்மாக் கடை திறப்பதால் கரோனா வைரஸ் சமூக பரவலாக மாறும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அரசு இன்று முதல் அரசு டாஸ்மாக் கடையைத் திறக்க உத்தரவிட்டது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அவரவர் இல்லங்களிலிருந்து கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்த தனது கட்சியினர் மற்றும் தோழமைக் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.