கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "எழுச்சியோடும் ஆரவாரத்தோடும் வரவேற்றமைக்கு நன்றி. இது தேர்தல் பரப்புரையா அல்லது வெற்றிவிழா பொதுக்கூட்டமா என்று வியந்துப்பார்க்கிறேன். உங்களை தேடி வாக்கு கேட்டு வந்துள்ளேன். கரூர் மாவட்டத்திற்கு நிறைய பெருமைகள் உண்டு. அது போல திமுகவிற்கு கரூர் மாவட்டம் பெருமையை தேடித் தந்துள்ளது.
நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகளை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன. அதில், அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்ட ஆளுங்கட்சியினர் மிரண்டு போய் இருக்கின்றனர். இந்நிலையில், மார்ச் 25 ஆம் தேதி தமிழ்நாட்டில் இயங்கும் மாலைமுரசு எனும் தமிழ் செய்தி தொலைக்காட்சி தென் மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனக் கருத்து கணிப்பு மூலம் தெரிவித்தது.
இதனைப் பார்த்து ஆளும் அதிமுக அரசு உடனடியாக அரசு கேபிள் மூலம் அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு தற்போது வரை நிறுத்தப்பட்டுள்ளது. சர்வாதிகார நோக்கோடு, கையில் அதிகாரம் இருக்கிறது என்ற காரணத்தால் தொலைக்காட்சி இணைப்பை துண்டித்துள்ளனர். இதெல்லாம் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதியோடு முடிவுக்கு வர உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தில் இயங்கும் அரசு பல ஆயிரம் கோடி செலவு செய்து தினசரி பத்திரிகைகளில் முழு பக்க விளம்பரங்களை செய்து வருகின்றன. இதையெல்லாம் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி முடிவுக்கு வரப்போகிறது.
மக்களின் வரிப்பணத்தில் மக்களிடமே பொய் விளம்பரங்களை செய்து ஏமாற்றி வருகின்றன. அதிமுக அரசு முகத்திரையை கிழித்து இதற்கு ஒரு முடிவு கட்டப் போகிறார்கள். தமிழ்நாட்டில் பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் பதவி வகித்த இரண்டு அமைச்சர்களில் விஜயபாஸ்கர் என்ற பெயர் கொண்ட இரு அமைச்சர்கள் இருக்கின்றனர். ஒருவர் சுகாதாரத்துறை அமைச்சர் குட்கா விஜயபாஸ்கர், மற்றொருவர் கரூரில் உள்ள மணல் திருட்டு விஜயபாஸ்கர். இருவரும் இந்தத் தேர்தலில் வைப்புத் தொகையை இழந்து விட்டு அரசியலை விட்டு ஓட இருக்கிறார்கள்.
கரூர் அமராவதி ஆற்றில் தண்ணீர், மணல் திருட்டு நடைபெற உடந்தையாக இருக்கிறார் மணல் திருட்டு விஜயபாஸ்கர். அவரது போக்குவரத்துத் துறையில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற பணிகளை அவரது பினாமிகளுக்கு மட்டுமே வழங்கியுள்ளார். அரசு போக்குவரத்து பேருந்துகளை கூண்டு கட்டும் பணியை மேற்கொள்ள தனது பினாமிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கியுள்ளார். இதனால் உள்ளூரில் உள்ள கூண்டு கட்டும் மற்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்கு தமிழ்நாடு அரசு ஒரு மோசமான ஆட்சியை நடத்தி வருகிறது. உதாரணத்திற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் நிலையத்தில் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது, பொள்ளாச்சியில் மூன்று ஆண்டுகளாக இளம்பெண்களை சித்திரவதைக்கு ஆளாக்கி கொடுமைப்படுத்தியது எனக் கூறிக்கொண்டே போகவலாம்.