கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "திமுக இதுவரை செய்த திட்டங்களையும், சாதனைகளையும், ஆட்சிக்கு வந்தபின் செய்ய உள்ள திட்டங்களையும் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்கிறோம். ஆனால் தம்பிதுரை செல்லும் இடமெல்லாம் அவரை பொதுமக்கள் விரட்டி அடிக்கும் சூழ்நிலையை ஊடகங்களில் பார்க்கிறோம்.
திமுக ஆட்சியில் நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டுவர முயற்சித்தபோதும் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என திமுக மறுத்துள்ளது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கருணாநிதியின் முழக்கத்திற்கு ஆதரவளிப்பதுபோல் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார்.