கரூர் பசுபதிபாளையம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த தம்பதியர் பாலசுப்பிரமணி-முத்துலட்சுமி. இவர்களது வளர்ப்பு மகன் தர்ஷன் (7). இந்நிலையில் தர்ஷன் கடந்த 4ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல்போனதாக, பாலசுப்பிரமணி பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுவனைத் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை பசுபதிபாளையம் அருகேவுள்ள விவசாய கிணற்றில் சிறுவன் சடலம் மீட்கப்பட்டது.
இதையடுத்து, சிறுவனின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக காந்தி கிராமன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் சிறுவனின் தாயார் முத்துலட்சுமி, தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் புத்தாண்டு தினத்தன்று குளிர்பான பாட்டில் தொடர்பாக அப்பகுதியிலுள்ள சிறுவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள ஐந்து சிறுவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் விசாரணைக்கு சென்று திரும்பிய வாலிபர் மர்ம மரணம்