கரூர்:ராயானூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,22,019 பேருக்கு 267.43 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் 52.40 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 114.16 கோடி ரூபாய் மதிப்பிலான 39 புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை முதலே காத்திருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற இருக்கிற பயனாளிகளே சிறப்பு விருந்தினர்கள். இதற்காக முதற்கண் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வருகை தந்திருக்கிறேன்.
இந்த நிகழ்வில் ஆண்களுக்கு நிகராக உழைத்து, தங்கள் குடும்பங்களை காப்பாற்றும் தாய்மார்களை பார்த்தது உள்ளபடியே மனமகிழ்ச்சி அளிக்கிறது. கரூர் மாவட்டம் ஒரு முன்னுதாரணமான மாவட்டம். கரூர் மாவட்டத்தில் ஒரு செயலைத் தொடங்கினால், அது மிகப் பெரிய வெற்றிதான். அதனால்தான் கரூர் மாவட்டம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முன்மாதிரி மாவட்டமாக கரூர் மாவட்டம் திகழ்கிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக, இரண்டு அரசு பள்ளி மாணவிகளான சர்மிளா மற்றும் நசீமா பானு ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாற்றியதை அனைவருமே வியந்து பார்த்தோம். அதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 50 புதிய திட்டங்கள் குறித்து காணொளி வெளியிட்டார்கள். இவை அனைத்துமே கரூர் மாவட்டத்தில் முன்னோடியான திட்டங்கள் செயல்படுத்தி வருவதற்கு எடுத்துக்காட்டு.
கரூர் மாவட்டம் முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் மீதும், தங்கள் உழைப்பின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையால் கரூர் மாவட்டம் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிறது. குறிப்பாக செந்தில் பாலாஜி எந்த செயலை முன்னெடுத்தாலும், அதில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் செய்து முடிக்கிறார். அதற்கு ஆதாரமாக நீங்கள் இங்கு திரண்டு இருப்பதே சாட்சி.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் பயணத்தை கருணாநிதி தொடங்கினார். நானும் எனது அரசியல் பயணத்தை குளித்தலையில் தொடங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டி இருந்ததால், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.