கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட பொறுப்பாளரும் தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் இன்று (ஜூன் 1) நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மாநில சட்டத்துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கருணாநிதியின் படத்திற்கு மரியாதை:அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, 'கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை நிறுவியதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி, கருணாநிதி பிறந்த நாளன்று மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், ஒரு மாநகராட்சி, 157 ஊராட்சி என மொத்தம் 222 பகுதிகளில் சுமார் 3,000 இடங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
"திராவிட மாடல்" விளக்கக் கூட்டம்:குறிப்பாக, மாவட்டம் முழுவதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் "திராவிட மாடல்" விளக்கக் கூட்டங்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடத்தப்பட உள்ளது.