தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கரூரில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர் கூறுகையில், “தமிழ்நாட்டில் நேற்று (செப்.10) முதல் அமல்படுத்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வு குறித்து அனைத்து ஊடகங்களிலும் மிகப் பெரிதாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் சிலர் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அதன் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசும், ஒன்றிய அரசின் ஒழுங்குமுறை மின்சார கட்டுப்பாட்டு ஆணையமும் பலமுறை கடிதம் அனுப்பி தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்த, மின் கட்டண உயர்வை மேற்கொள்ள வலியுறுத்தினார்கள்.
தமிழ்நாடு நிதித்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபொழுதும் காணொலிக்கூட்டங்கள் மூலமும் மின்சார வாரியத்தை மேம்படுத்த கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின் கட்டண உயர்வு பொதுமக்கள், சிறு, குறு, வணிக நிறுவனங்கள் பாதிக்காத வண்ணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டுக்கு முன்னர் மின்சார வாரியத்தின் நிலையை சீர் செய்வதற்கு முதலமைச்சர் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மானியமாக வழங்கி நிதி மற்றும் கடன் சுமையிலிருந்து மீட்க நடவடிக்கை மேற்கொண்டார்கள். நடப்பு ஆண்டில் ரூ.3,500 கோடி தமிழ்நாடு அரசு மானியம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மின் பகுப்பிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய மின் தொகுப்பை வழங்காமல் 20 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை வழங்காததை காரணம் காட்டி நிறுத்தினார்கள். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதிநிலையினை கருத்தில் கொண்டு, மின் கட்டண உயர்வினை அமல்படுத்த 7,338 பேரிடம் நேரிலும் மின்னஞ்சல் மூலமாகவும் கருத்துகள் பெறப்பட்டன.
தமிழ்நாட்டில் மூன்றரை கோடி நுகர்வோர் இருக்கும் நிலையில் மின் கட்டணம் குறித்து 3,338 பேர் மட்டுமே கருத்துகளைத் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உள்ள சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விலை உயர்வில் இரண்டு விதமான கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளதாக கோரிக்கை பெறப்பட்டது.
இதே போல வணிக நிறுவனங்களுக்கு உத்தேசிக்கப்பட்ட கட்டண உயர்வு கூடுதலாக உள்ளது என பெறப்பட்ட கோரிக்கை அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் 3,217 கோடி ரூபாய் கட்டண குறைப்பு மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களோடு மின் கட்டணம் தமிழ்நாட்டில் மட்டுமே மிகக் குறைவு.
- 100 யூனிட் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மின் நுகர்வோர் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு எவ்வித கட்டண உயர்வும் இன்றி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு வெறும் ரூ.27.50 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
- 201 யூனிட் முதல் 300 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் 37 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ரூ.72.50 பைசா மட்டுமே மின் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
- 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் தமிழ்நாட்டில் 18 லட்சத்து 82 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ரூ.147.50 பைசா மின் கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்கோடு ஒப்பிடுகையில் கர்நாடக மாநிலத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு ரூ.4.30 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் 100 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு 5.25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கோடி நுகர்வோருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.