கரூர்: தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மறுப்புத் தெரிவித்து, கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் திமுக வேட்பாளருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தைக் காண்பித்து கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்திய தனியார் நிறுவன ஊழியர்கள் மீது அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி அவர்களின் கேமரா, செல்போன்களைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கார், கரூர் வையாபுரி நகரில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையின் அலுவலகத்தில் செய்தியாளர்களை நேற்றிரவு (மார்ச் 31) சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "மார்ச் 30ஆம் தேதி இரவு கரூரில் தேர்தல் பரப்புரை செய்துகொண்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக சிலர் நபர்கள் பரப்புரை செய்யும் இடங்களில் சுற்றிச் சுற்றிவந்தனர். தொடர்ந்து நான்கு நாளாக அந்த நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அவர்களிடம் விசாரித்ததில் கருத்துக் கணிப்பு எடுப்பதாக முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் திமுகவுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்பதும் தெரியவந்தது. திமுகவின் முக்கியத் தலைவர்கள், நிர்வாகிகளுடன் இருந்த புகைப்பட ஆதாரங்கள் கிடைத்தன. உடனே அவர்களைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அவர்களை அடித்து, அவர்களிடமிருந்து நகை, பொருள்கள் பறித்துக் கொண்டதாகக் கூறுவது தவறு. திமுகவின் ஆதரவாளர்களாக இருக்கும் இவர்கள் நான்கு நாள்களாக எங்களைப் பின்தொடர காரணம் என்ன?
கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுப்பதற்கு முன்பு, 11 திமுக வேட்பாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அவருடைய தூண்டுதலின்பேரில் எனது பரப்புரையைச் சீர்குலைக்க, சாதிய பிரச்சினையை உண்டாக்க அல்லது ஏதாவது தாக்குதல் நடத்த தயாராய் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
கரூரில் தங்கி இருக்கும் அவர்கள் விடுதியில் கொடுத்த முகவரி வேறு, கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் உள்ள முகவரி வேறாக உள்ளது. கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் கொடுத்த பேட்டிகள் அனைத்தும் பொய்.
எனது பரப்புரையைச் சீர்குலைக்க முயற்சிகள் நடக்கின்றன கருத்துத் கணிப்பு நடத்தியவர்கள் திமுக வேட்பாளர், முக்கியத் தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்பட ஆதாரங்களை உங்களிடம் காட்டுகிறேன். திமுகவினருக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் இதுபோன்று செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது, எனது நெற்றியில் ஆரத்திப்பொட்டு வைத்த பெண்ணின் கையைத் தட்டிவிட்டதாக ஒரு காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. பொதுமக்கள் ஆரத்தி எடுக்கும்போது வைத்த பொட்டால் எனது நெற்றியில் புண்ணாகிவிட்டது. இதனால் அவர் அந்தப் பெண் பொட்டுவைத்ததைத் தடுத்தேன். இதனைத் தவறாகச் சித்திரித்து பட்டியலின பெண் பொட்டுவைக்கும்போது அமைச்சர் தட்டிவிட்டதாக திமுகவினர் பொய்யாகப் பரப்புரை செய்துவருகின்றனர்.
திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 பிரிவு வழக்குகள் 16 நிலுவையில் உள்ளன. விளம்பரத்திற்காக இதுபோன்ற கேவலமான வேலைகளில் ஈடுபடுவது அவசியமற்றது. ஏதாவது ஒரு பொய்யைக் கூறி தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என திமுக வேட்பாளர் நினைக்கிறார்.
அதற்காக ஆள்கள் வைத்து 25 விழுக்காடு கூடுதல் வெற்றி வாய்ப்பு இருப்பதாகப் பரப்பிவருகிறார். தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என்பதற்காகப் பொறுமையாக இருக்கின்றேன். திமுக வேட்பாளர் எல்லை மீறிச் செல்கிறார். இன்னும் ஒரு வார காலத்துக்குள் எனக்கோ, எனது கட்சிக்காரர்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்குக் காவல் துறையும், தேர்தல் ஆணையமும்தான் பொறுப்பு" எனத் தெரிவித்தார்.