கரூர்: மண்மங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட நெரூர் தென்பாகம் கிராமத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டுப் பாதையை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துவருவதாகக் கூறி அந்தப் பாதையை மீட்டுத்தரக் கோரி ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு சுடுகாட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துவந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த வருவாய் துறை அலுவலர்களிடம் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வேலுசாமி (45) என்பவர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பாதை அமைக்க உத்தரவு:
இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு சென்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் பொதுமக்கள் பாதையை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வேலுசாமி உயிரிழந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பாதையை உடனடியாக அமைத்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இறந்தவருக்கு உடற்கூராய்வு:
இதற்கிடையில் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த வேலுச்சாமியின் உடற்கூராய்வு நடைபெற்றது. அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வேலுச்சாமியின் உறவினர்கள், பல்வேறு பட்டியலின அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆறுதல் தெரிவிக்க கூடினர்.
இதனை அடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து பாதை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்றது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட லாரிகளில் வண்டல் மண் கொட்டப்பட்டு பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.